கெட்டிக்கார இளைஞன்:

கெட்டிக்கார இளைஞன்:
ஒரு அரசன் காட்டில் வேட்டைக்கு சென்ற இடத்தில் வழி தவறி கொள்ளையர்களிடம் தனியாக மாட்டிக்கொண்டார். அப்போது எங்கிருந்தோ அங்கு வந்த 6 இளைஞர்கள் அவரை காப்பாற்றினர்.

மறுநாள் அரசவைக்கு அவர்களை அழைத்து அவர்களுக்குச் சன்மானம் அளிக்க விரும்பினான் அரசன்.

Tamil stories

"ஒவ்வொருவரும், உங்களுக்கு எது மிகவும் மகிழ்ச்சி அளிக்குமோ, அதைத் தயங்காமல் கேளுங்கள். என் சக்திக்கோ, ஆற்றலுக்கோ அப்பாற்பட்டதாய் இருந்தால் அன்றி, இக்கணமே கொடுத்திடுவேன், இது சத்தியம்" என்று உரைத்தான் 

நண்பர்களில் மூத்தவன் முதலில் தன் விருப்பத்தைத் தெரிவிக்கக் கோரப்பட்டான். கணப்பொழுது அவன் யோசித்துவிட்டுச் சொன்னான்: "மாமன்னா, வசதியான வீடொன்றில் வசித்திட வேண்டும் என்பதே ஏழையென் வெகுநாள் விருப்பம். அருள் புரிந்திடுவீர்." உடனே அரசன் ராஜாங்கச் சிற்பியை அழைத்து, "இவனுக்கு ஒரு பளிங்கு மாளிகை கட்டித்தா" என பணித்திட்டான். 


அடுத்த இளைஞன், அரசவைப் பிரபு ஆக வேண்டும் என ஆசை வெளியிட்டான். அரசனும் அவனுக்குச் சில பட்டங்களை அளித்து, தன்னுடைய பிரபுக்களில் ஒருவனாய் ஆக்கிக் கொண்டான். 

மூன்றாமவன், "அரசே, என் கிராமத்து மக்கள் கறிகாய் விற்பதற்காக வாராவாரம் பட்டினத்துச் சந்தைக்கு வருகிறார்கள். வருவதற்கு ஒரு நல்ல சாலை இல்லாமல் வருந்துகிறார்கள். மழைக்காலத்திலோ மகா கஷ்டம். நகரத்துக்கும் கிராமத்திற்கும் இடையே நல்ல சாலை போட்டுத் தந்தால், அதுவே எனக்கு மகிழ்ச்சி" என்றான். "அப்படியே ஆகுக" என்று அரசனும் தலையைசைத்திட, சாலைத்துறை அமைச்சர் ஓலை நறுக்கில் குறித்துக் கொண்டார்.


நான்காவது ஆளின் ஆசையைக் கேட்டபோது, அவன் நாணிக்கோணிக்கொண்டு, "நானிலத்தோர் தந்தையே! தந்தையினும் சாலப் பரிந்து அடியேனுக்கு ஒரு அழகான பெண்ணைத் தேடி மணம் முடித்து வைத்தால் மனமகிழ்வேன்" என்றான். அரசனின் விதூஷகனுக்கே ஒரு அழகான பெண் இருந்தாள். நல்ல மாப்பிள்ளை, நங்கையைக் கொடுத்திடு என்றான் அரசன். விதூஷகனும் குதூகலத்தோடு ஒப்புக் கொண்டான்.

ஐந்தாம் இளைஞன் பணம் வேண்ட, அவனுக்கு மூட்டை மூட்டையாகத் தங்கத்தைக் கொடுத்தார்கள். 

கடைசியில் ஆறாவது இளைஞனின் முறையும் வந்தது. அவன் சொன்னான் : "அரசே, ஆண்டுக்கொருமுறை அடியேன் குடிசையில் நீர் விருந்தாளியாக எழுந்தருள வேண்டும்." இந்த விசித்திர வேண்டுகோளைக் கேட்டு எல்லாருக்கும் வியப்பாய்ப் போயிற்று. அரசனுக்கும் கொஞ்சம் வேடிக்கையாகவேபட்டது. இருந்தாலும், தன் ஆற்றலுக்கு உட்பட்ட எதையும் தருவதாய் வாக்களித்திருந்தான். ஆகையால், ஆண்டிற்கு ஒரு பகலும் இரவும் அவன் வீட்டில் தங்குவதாய் ஒப்புக்கொண்டான். 

ஆண்டிற்கொரு முறை அரசன் அந்தக் கிராமத்தானின் விருந்தாளியாய்த் தங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் செய்வது, அரசாங்கத்தின் பல்வேறு துறைகளின் பொறுப்பாக ஆயிற்று. 


முதலாவதாக, ராஜாவின் தேர் ஜோராய்ச் செல்வதற்கு நல்ல சாலை போட வேண்டியிருந்தது. 

வருஷத்துக்கு ஒரு முறைதான் என்றாலும், வதுமைமிக்க ஒரு குடிசையில் வேந்தன் வசிப்பதும் தூங்குவதும் எப்படி என்று இன்னொரு கேள்வி முளைத்தது. சரி, அரசன் தங்குவதற்கேற்ற ஒரு ஆடம்பரக் கோட்டையை அவனுக்குக் கட்டிக்கொடு என்றார்கள். அவன் ஏழை ஆயிற்றே? கோட்டையைக் கட்டிக் காப்பதற்கும், அரசனையும் பரிவாரங்களையும் உபசரிப்பதற்கும் பணத்துக்கு எங்கே போவான்? இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, அவனுக்கு மூட்டை மூட்டையாய் தங்கமும் வருடாந்திர மானியமும் வழங்கப்பட்டன.


வழி வழியாய் வந்த ஒரு வழக்கத்தின்படி ஒரு பிரபுவின் வீட்டில் தான் அரசன் விருந்தாளியாய்த் தங்கலாம். அதற்காக, அந்த இளைஞனுக்கு விதவிதமான பட்டங்களுடன் பிரபுப் பதவியும் அளிக்கப்பட்டது. ஒரு ராஜபுத்திரன் போல அவனை எல்லாரும் கௌரவிக்கத் துவங்கினார்கள்.

இன்னும் ஒன்றே ஒன்று பாக்கி. அரசனின் ருசியறிந்து, நாசூக்கான பழக்க வழக்கமறிந்து, அன்புடன் விருந்தோம்ப, அவன் வீட்டுப் பெண்மணிக்கு நாலும் தெரிந்திருக்க வேண்டாமா? அரசனின் மகளைவிட அவையனைத்தும் தெரிந்தவர் யார் இருக்க முடியும்? எனவே இளவரசியை இளைஞனின் இல்லத்தரசி ஆக்குவதற்கு ஜாம் ஜாம் என்று ஏற்பாடுகள் நடந்தன. 

இவ்வாறு ஒரே ஒரு வரம் கேட்ட அந்தக் கெட்டிக்கார இளைஞன், தன்னுடைய ஐந்து துணைவர்களும் பெற்றதை எல்லாம் பெற்றான். ஏன், இன்னும் நிறைய அதிகமாகவே பெற்றான்.
Previous
Next Post »